search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகள் பலி"

    பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் மகள் இறந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 70), விவசாயி. இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்தார். அவர் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ராஜு, உறவினர்களிடம் இது குறித்து கூறி வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மகள் பற்றி பேசிக் கொண்டிருந்த ராஜு திடீரென வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜு பரிதாபமாக நேற்று மாலை உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி மாயஜோதி (55) அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்தார். மேலும் ராஜுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர் அருகே கார்-வேன் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    செய்துங்க‌ நல்லூர்:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜ கோபால் (வயது36). இவர் கார்பெண்டர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா(30). இவர்களுக்கு இந்துஜா(7), பிரனிஷ்கா(3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ராஜகோபால் தொழில் விசயமாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    ராஜகோபாலின் மாமனார் வீடு சுத்தமல்லியில் உள்ளது. ராஜகோபாலின் மைத்துனருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காலை நெல்லை சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

    இதில் கலந்துகொள்வதற்காக ராஜகோபால் தனது மனைவி கவிதா, மகள்கள் இந்துஜா, பிரனிஷ்கா ஆகி யோருடன் காரில் வந்தார். அவர்களுடன் ராஜகோபாலின் தங்கை முத்துச் செல்வி(34), அவரது கணவர் அய்யப்பன்(37), மகள் பூஜா(3) ஆகியோரும் வந்தனர். காரை ராஜகோபால் ஓட்டினார்.

    கார் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள புளியங்குளம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சமையல் கோஷ்டியினர் ஒரு வேனில் சென்றனர். எதிர்பாராத விதமாக காரும், வேனும் பயங்கரமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் காரின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மற்றும் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு ப‌ணியில் ஈடுபட்டார்கள்.

    காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அர‌சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி இந்துஜா பரிதாபமாக இறந்தாள். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் கார் மீது மோதிய வேனின் முன்பகுதியும் சேதமானது. விபத்து நடந்ததும் வேன் டிரைவர் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் செய்துங்க நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. #Accident
    ×